ஸ்காட்லாந்து நாட்டின் மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்தில் இருக்கும்
ஓவர்டவுன் எஸ்டேட்டில் ஒரு பாலம் இருக்கிறது. இது ஒரு மர்மமான பாலம்!
ஓவர்டவுன் ஸ்டேட்டுக்கும், அதில் மைந்திருக்கும் மேன்சனுக்கும்,
சுற்றியிருக்கும் அழகான தோட்டத்துக்கும் 100 ஆண்டு கால வரலாறு உண்டு. 1893ல் இந்த எஸ்டேட்டை வாங்கினார் லார்ட் ஓவர்டவுன் என்பவர். அந்த
எஸ்டேட்டை கிழக்கு, மேற்கு என பிரித்து விரிவுபடுத்தினார். இடைப்பட்ட
பகுதியில் ஓர் அருவி விழுந்து நீரோடையாக ஓடியது. பாறைகளால் நிரம்பிய அந்தப்
பகுதியில் நீரோடையைக் கடக்க ஒரு பாலம் கட்டினார். கருங்கற்களாலும்
கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் அதிக அகலமோ, நீளமோ கிடையாது. 2
அடி உயரம். தடிமனான கைப்பிடிச் சுவர். சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில்
பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக அரைவட்ட வளைவுகள்.
இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். பாலத்தைக் கடந்தால் அந்தப்
பக்கம் மேன்சன்.
ஒரு நாய் தன் பின்னங்கால்களைத்
தரையில் ஊன்றி, முன்னங்கால்களை பாலத்தின் கட்டைச் சுவர் மேலே
வைத்துக்கொண்டு, கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கும்படி பாலம்
அமைந்திருந்தது. பாலத்திற்கும் தரைப்பகுதிக்கு இடைபட்ட ஆழம் 50 அடி
இருக்கும். ஒரு நாள் பென் என்ற நாய் இந்த எஸ்டேட்டுக்கு வந்தது. நீண்ட
மூக்கும் புசுபுசு முடியும் கொண்ட பெண் நாய் அது. அந்த ஊருக்கு வந்திருந்த
டோனா தன் கணவருடனும், இரண்டு வயது மகனுடனும் செல்ல நாய் பென்னுடனும்
வாக்கிங் சென்றாள். ஓவர்டவுன் பாலத்துக்கு அருகில் வந்தார்கள். அப்போது
பென் துள்ளலோடு ஓடி,பாதி பாலத்தைத் தாண்டி, வலதுபுறமுள்ள கடைசி இரு
வளைவுகளுக்கு இடையே,சட்டென கைப்பிடிச் சுவர் தாண்டி கீழே குதித்து தற்கொலை
செய்துகொண்டுவிட்டது! ‘ஓ மை காட்!’ அலறோடு அவர்கள், பாலத்தின் கீழே
பார்க்க, பாறைகளின் மேல் விழுந்து அலங்கோலமாகக் கிடந்தது பென். டோனாவின்
குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கென்னத் என்பவர் தனது செல்ல நாயுடன்
வந்திருந்தார். ‘இவன்கூட இப்படித்தான். போன வருடம் ஒருநாள் அந்தப்
பாலத்தின் மீதிருந்து குதித்துவிட்டான். நீங்கள் சொன்ன அதே இடத்தில்தான்.
நல்லவேளை மிகவும் பாதுகாப்பாக ஒரு புதர்மேல் விழுந்திருந்தான். அடி
பலமில்லை. ஓரிரு நாள்கள் பயந்ததுபோலஇருந்தான். எதுவும் சாப்பிடவில்லை.
பிறகு சரியாகிவிட்டான்.நாங்கள் இப்போது இவனை அழைத்துக் கொண்டு அந்தப்
பாலத்தின்மீது செல்வதில்லை.’- என்று கென்னத்தும் தன் நாய் பற்றிய சம்பவத்தை
சொன்னார். டோனாவுக்கு அதிர்ச்சி. ‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?’ ‘நீங்கள்
மட்டுமல்ல, இந்நகரில் வசிக்கும் பலரும் தங்கள் செல்ல நாய்களை அங்கே
பறிகொடுத்திருக்கிறார்கள். நாய்களோடு அங்கே செல்லவே எல்லோரும்
பயப்படுகிறார்கள். அதை நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் என்றுதான்
அறிவித்திருக்கிறார்கள்.’- என்றார் அவர்.
சென்ற நூற்றாண்டிலிருந்து
இன்றைய தேதி வரை நூற்றுக்கணக்கான நாய்கள், ஓவர்டவுன் பாலத்தில் இருந்து
குதித்து தற்கொலை செய்திருக்கின்றன. 1950-லிருந்து வருடத்துக்கு குறைந்தது
டஜன் நாய்களாவது இங்கே தற்கொலை செய்து கொள்கின்றன. பாலத்தில் அப்படி
என்னதான் மர்மம் இருக்கிறது?
சென்ற நூற்றாண்டின் மத்தியில்
உலகத்தின் கவனம் இந்தப் பாலத்தின் மேல் குவிந்தது. விதவிதமான ஆராய்ச்சிகள்
ஆரம்பித்தன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது.
வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை. நீண்ட
மூக்குகள் கொண்ட நாய்கள் மட்டுமே குதிக்கின்றன. ஆதி ஐரோப்பியர்களின் ஓர்
இனமான செல்ட் மக்களின் நம்பிக்கைப்படி,அந்த இடத்தில்தான் உலகத்தின்
சொர்க்கமும் நரகமும் சந்திக்கின்றன. ஏதோ அமானுஷ்ய சக்தி, அந்தப் பாலத்தில்
இருக்கிறது. அதுவே நாய்களைத் தூண்டி விடுகிறது அல்லது மிரளச் செய்கிறது
என்று ஆய்வுகள் தொடர்ந்தன.
மனநல மருத்துவரான டேவிட் சான்ஸும் தனது
கிழட்டு நாய் ஹென்றிக்ஸை வைத்து சோதனை செய்தார். ‘நான் அதைப்
பிடிக்கவில்லை. அது சுதந்தரமாக பாலத்தின் மேல் நடந்துபோனது. வலதுபுறத்தின்
அந்த இடம் வந்ததும், ஒருமாதிரி ஆகிவிட்டது. கட்டைச் சுவரின் மேல் கால்களால்
பிராண்ட ஆரம்பித்துவிட்டது. வயதான காரணத்தினால் அதனால் எம்பிக் குதிக்க
முடியவில்லை. அந்த இடத்தில் தான் நாய் ஏதையோ கண்டு, அல்லது கேட்டு, அல்லது
ஏதோ வாசனையால் ஈர்க்கப்பட்டதால் அப்படிச் செய்துள்ளது. அது எதனால் என்று
தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்றார். நாய்களைப் பயமுறுத்தும் விதமாக
தோற்றத்தைக் கொண்ட எந்தப் பொருளும் அங்கில்லை. நாய்களை மிரளச் செய்யும்
விதமான ஒலிகளும் அங்கே கேட்பதில்லை. எனவே ஏதோ வாசனைதான் காரணம் என்றார்
டேவிட்.
இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய்களின் தற்கொலை மர்மம் தொடர்கிறது.